search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2020-21-ம் ஆண்டில் குறைவான வரி மதிப்பீட்டால் தமிழக அரசுக்கு ரூ.236 கோடி வருவாய் இழப்பு
    X

    2020-21-ம் ஆண்டில் குறைவான வரி மதிப்பீட்டால் தமிழக அரசுக்கு ரூ.236 கோடி வருவாய் இழப்பு

    • தேனி வளர்ப்பு அலகுக்கான துணைக்கூறுகளை சரிவர செயல்படுத்தாததால் 169 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.10.34 லட்சம் பயனற்றதாகிவிட்டது.
    • வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்காமல், 590 டன் நெல் விதைகள் அதிக அளவில் வழங்கப்பட்டன.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 4 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த தணிக்கை அறிக்கைகள், 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையுள்ளவை ஆகும்.

    இதுகுறித்து மாநில முதன்மை தணிக்கை தலைவர் பிரிவு-1 ஆர்.அம்பலவாணன், பிரிவு-2 கே.பி.ஆனந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சரக்கு மற்றும் சேவை வரி, வணிக வரி, முத்திரை தீர்வை, பதிவுக்கட்டணம், நில வருவாய் ஆகியவற்றில் 1,403 இனங்களில் குறைவான வரி மதிப்பீடுகள் செய்யப்பட்டு, குறைவாக வரி விதிக்கப்பட்டு ரூ.236 கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    விருதுநகர் வட்டத்தில் 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் 14 முகவர்கள் மதிப்பு கூட்டு வரி சட்டத்தின்படி கொள்முதல் வரி கட்டாமல் ரூ.235.14 கோடி மதிப்புள்ள பருப்பு வகைகளை கொள்முதல் செய்துள்ளனர். அதில் ரூ.176.83 கோடி மதிப்புள்ள சரக்குகளை வேறு மாநிலங்களில் இருப்பு வைத்தனர். அந்த வகையில் ரூ.5.48 கோடி வரி வராமல் போனது.

    முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2020-21-ம் ஆண்டில் வருவாய் வரவில் 0.26 சதவீதம் என்ற மிகக்குறைந்த உயர்வுதான் காணப்பட்டது. வரியில்லாத வருவாயில் கணிசமான குறைவு இருந்தது.

    திருமண உதவி, மகப்பேறு உதவி, இலவச மடிக்கணினி, சீருடை வழங்குதல் போன்ற மறைமுக மானியங்கள், முந்தைய ஆண்டைவிட ரூ.6,746 கோடி உயர்ந்தது. இந்த உயர்வுக்கு, கொரோனா ஊரடங்கை சமாளிக்க மக்களுக்கு கொடுக்கப்பட்ட பண உதவி முக்கிய காரணமாகும். இந்த செலவு, மானியத்திற்கு பதிலாக மானிய உதவி என்று தவறாக வகைப்படுத்தப்பட்டது.

    மானாவாரி பகுதி மேம்பாடு என்பது, பயிர்கள், தோட்டக்கலை, கால்நடை, மீன்பிடி, வனவியல் போன்ற பல விவசாய அம்சங்களை உள்ளடக்கியதாகும். ஆனால் மானாவாரி பகுதிகளுக்கு பதிலாக நீர்ப்பாசன நிலங்களில் இந்த திட்டம் முறையற்ற வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் பயன்பெற்ற சில விவசாயிகளுக்கு மானாவாரி மற்றும் நன்செய் ஆகிய 2 நிலங்களும் இருந்தன. நன்செய் நிலம் இருந்தவர்களை, மானாவாரி விவசாயம் செய்து வருவதாகவும் அரசு கூறியிருக்கிறது.

    தேனி வளர்ப்பு அலகுக்கான துணைக்கூறுகளை சரிவர செயல்படுத்தாததால் 169 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மானியம் ரூ.10.34 லட்சம் பயனற்றதாகிவிட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர்களால் கொள்முதல் நடைமுறை மீறப்பட்டதால் ரூ.3.22 கோடி தேவையில்லாத செலவு ஏற்பட்டது.

    கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் எழிச்சூர் மற்றும் தையூரில் தலா ஆயிரம் தொழிலாளர்கள் தங்கும் வசதி கொண்ட 2 விடுதிகள் கட்டப்பட்டன. அதை கட்டிய இடம் சரியானதல்ல. இதனால் ரூ.31.66 கோடி வீண் செலவு ஏற்பட்டது.

    72 மாதிரி பள்ளிகளின் 31 ஆயிரத்து 152 மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் ரூ.4.13 கோடி வீணாக செலவானது. மேலும் 49 மாதிரி பள்ளிகளில் 21 ஆயிரத்து 86 மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட ரூ.2.22 கோடி மதிப்பிலான சீருடைகளில் மிகக் குறைவான சீருடைகளே பயன்படுத்தப்பட்டன.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மின் பாடத்தொகுப்புகள் மற்றும் மின் கற்றல் முகப்பை (போர்டெல்) உருவாக்குவதற்கான ஒப்பந்த ஆவணங்கள் தயாரிப்பதில் முறைகேடுகள் நடந்தன. ஒப்பந்த மதிப்பீட்டில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் ஒப்பந்ததாரரின் சேவைகளின் தரத்தை உறுதி செய்யாததால் ரூ.10.70 கோடி அளவுக்கு தேவையற்ற செலவும், ரூ.5.17 கோடியை செலுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட சில உள் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதில் நேரிட்ட குறைபாடுகளினால் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்படாத தொழில்நுட்ப சேவைகளுக்கு ரூ.11.41 கோடி முறைகேடாக வழங்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் உழவர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ப வழங்காமல், 590 டன் நெல் விதைகள் அதிக அளவில் வழங்கப்பட்டன. இது ரூ.1.33 கோடி கூடுதல் செலவுக்கு வழி வகுத்தது. காஞ்சிபுரம், பெரம்பலூர், திருப்பூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளின் தலைவர்களின் செயல்பாட்டினால் 'எம்.ஆர்.ஐ. ஸ்கேனரை' பொருத்துவதற்கான இடத்தை அடையாளம் காண்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ரூ.1.12 கோடி தவிர்க்கக்கூடிய செலவு நேரிட்டது. ஸ்கேன் வசதிகளை நோயாளிகள் பெற ஒரு ஆண்டு தாமதமாகி விட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×