என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குற்றாலம் அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையிலேயே அலைமோதிய வண்ணம் இருந்தது.
    • அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

    கடந்த 27-ந்தேதி மாலை திடீரென பெய்த கனமழையால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதனால் மறுநாள் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று மழை ஓய்ந்து அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. இதையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று விடுமுறை நாள் என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காலையிலேயே அலைமோதிய வண்ணம் இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

    அனைத்து அருவிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் அங்கு தேவையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, குளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடனே எச்சரிக்கை விடுக்கும் விதமாக அருவிக்கரையில் அபாய ஒலி எழுப்பும் வகையில் அலாரம் கருவி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அது செயல்படாமல் உள்ளது. செண்பகாதேவி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகுதான் மெயின் அருவிக்கு அந்த தண்ணீர் வருகிறது.

    எனவே அங்கு கண்காணிப்பு கேமரா அமைத்து அதனை கண்காணிக்க ஏற்பாடு செய்யலாமா? என ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.அதன்படி செண்பகாதேவி அருவிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து முறைப்படி கண்காணித்து வந்தால் இது போன்ற அசம்பாவிதங்களை நிச்சயமாக தடுக்க முடியும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×