search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசலால் ரெயில்கள் நிறுத்தம்- பயணிகள் அவதி
    X

    தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ரெயில்வே ஊழியர்கள் சரிசெய்த காட்சி

    அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசலால் ரெயில்கள் நிறுத்தம்- பயணிகள் அவதி

    • தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் உடனடியாக புளியமங்கலத்திற்கு விரைந்து வந்தனர்.
    • ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில்வே ஊழியர்கள் கோபால், மரியம்தாஸ் இன்று காலை தண்டவாள பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது புளியமங்கலம் என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் தண்டவாளத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டிருந்தது.

    இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கிருந்து தண்டவாள பராமரிப்பாளர்கள் மற்றும் சீரமைப்பு பணியாளர்கள் உடனடியாக புளியமங்கலத்திற்கு விரைந்து வந்தனர்.

    அந்த நேரத்தில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக அந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

    சென்னை நோக்கி வந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வேலூர் கண்ட்டோன்மென்ட் மின்சார ரெயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    புளியமங்கலம் பகுதியில் தண்டவாள விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரெயில்வே ஊழியர்கள் சீரமைப்பு செய்ததால் மறுபுறமும் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த நேரத்தில் சென்னையில் இருந்து சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், டபுள் டக்கர் எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ், திருத்தணி மின்சார ரெயில்கள் ஆகியவை நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    ஜோலார்பேட்டையில் இருந்து செல்லக்கூடிய ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் மின்சார ரெயில்களில் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் சென்னைக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர்.

    ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் அவர்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். சுமார் 10 ஆயிரம் பயணிகள் வரை ரெயில் தாமதத்தால் அவதியடைந்துள்ளனர்.

    சுமார் 30 நிமிடத்திற்கு பிறகு தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடும்பனி மூட்டம் நிலவுகிறது.

    அதன் காரணமாக அதிகாலை நேரத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது ஒருபுறம் இருக்க அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்படுவதை தடுக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

    Next Story
    ×