search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை வெள்ளத்தில் சிக்கி பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உடல் இன்று மீட்பு
    X

    மழை வெள்ளத்தில் சிக்கி பலி: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் உடல் இன்று மீட்பு

    • மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறு, குளங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    கோரம்பள்ளம் உள்ளிட்ட சில குளங்கள் உடைந்ததால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்தது.

    இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். 6-வது நாளாக இன்றும் வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்து உள்ளதால் குடியிருப்பு வாசிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    எனவே அங்குள்ளவர்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள். வீடுகளை சுற்றி வெள்ளம் உள்ளதால் குடிநீருக்காக அவர்கள் பெரிதும் தவித்து வருகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    மாநகர பகுதியான முத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து, அவரது தாயார் ஞானம்மாள் மற்றும் உறவினர் குழந்தை என 3 பேரும், அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேர் உடல்களும் இன்று கண்டெடுக்கப்பட்டது.

    தொடர்ந்து மாநகர பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    எனினும் வெள்ள நீர் வடியாததால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்றும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    Next Story
    ×