search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய உச்சத்தை தொட்ட மஞ்சள் விலை: குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    புதிய உச்சத்தை தொட்ட மஞ்சள் விலை: குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை கடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையானது.
    • விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும்.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதனால் ஈரோடு மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது.

    கடந்த மாதம் ஈரோடு சந்தையில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 500 முதல் ரூ. 7 ஆயிரத்து 500 வரை விற்பனையானது. இதனிடையே மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வடமாநிலங்களில் அதிக மழை பெய்ததன் காரணமாக மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டு தரம் குறைந்ததோடு, விலையும் குறைந்தது. இதன் காரணமாக வியாபாரிகளுக்கும், நிறுவனங்களுக்கும் தரமான மஞ்சள் கிடைக்கவில்லை.

    ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் விளையும் மஞ்சள் தரமாக இருப்பதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ரூ.8 ஆயிரத்து 500க்கு விற்பனையான ஒரு குவிண்டால் மஞ்சள் மேலும் விலை உயர்ந்து வெள்ளிக்கிழமை ரூ.10 ஆயிரத்து 500க்கு விற்பனை ஆனது.

    பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 568 முதல் ரூ.9 ஆயிரத்து 919 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 236 முதல் ரூ.9 ஆயிரத்து 779 வரைக்கும் விற்பனை ஆனது. இங்கு 962 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டதில் 909 மூட்டைகள் ஏலம் போனது.

    ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயித்து 550 முதல், ரூ.10 ஆயிரத்து 500 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.7 ஆயிரத்து 119 முதல் ரூ.9 ஆயிரத்து 980 வரையும் ஏலம் போனது. இங்கு 1,246 மஞ்சள் மூட்டைகளில் 1,067 மூட்டைகள் ஏலம் போனது.

    ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரத்து 400 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.6 ஆயிரத்து 789 முதல் ரூ.9 ஆயிரத்து 999 வரையும் விற்பனை ஆனது. இங்கு கொண்டு வரப்பட்ட 3 ஆயிரத்து 508 மஞ்சள் மூட்டைகளில் 1,482 மூட்டைகள் ஏலம் போனது.

    கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 569 முதல் ரூ.9 ஆயிரத்து 459 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயிரத்து 529 முதல், ரூ.9 ஆயிரத்து 499 வரைக்கும் விற்பனையானது. இங்கு 182 மூட்டைகள் மஞ்சளில் 88 மூட்டைகள் ஏலம் போனது.

    கடந்த 2011-ம் ஆண்டு மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் விற்பனையானது. அதன்பிறகு 12 ஆண்டுகளில் சராசரியாக குவிண்டால் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை மட்டும் விற்பனையானது. மராட்டியம், தெலுங்கானா மாநிலங்களில் சாகுபடி பரப்பு அதிகரித்து, தரத்திலும் ஈரோடு மஞ்சளோடு போட்டிபோட்டதால் மஞ்சள் விலை கடந்த 12 ஆண்டுகளாக உயரவில்லை. இந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இருந்து தரமான மஞ்சள் சந்தைக்கு வராததால் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரத்து 500 வரை உயர்ந்துள்ளது.

    மஞ்சள் விலை உயராததால் ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 10 ஆண்டுகளாக இருப்பு வைத்துள்ளனர். விலை உயர்வால் இருப்பு வைத்துள்ள மஞ்சள் இனி வரும் நாட்களில் விற்பனைக்கு வரும். இருப்பினும் தரத்தில் வேறுபாடு இருக்கும் என்பதால் புதிய மஞ்சளுக்கு கிடைக்கும் விலை பழைய மஞ்சளுக்கு கிடைக்காது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×