search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்- முதல் உறுப்பினராக இணைந்தார் விஜய்
    X

    த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்- முதல் உறுப்பினராக இணைந்தார் விஜய்

    • 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
    • சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கடந்த மாதம் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதைத் தொடர்ந்து கட்சியின் சின்னம், கொடி வடிவமைப்பு ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த கட்டமாக கட்சிக்கு 2 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதையொட்டி விஜய் ஆலோசனையின் பேரில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நிர்வாகிகளுடன் நேரடியாகவும், தொலைபேசி மூலமும் ஆலோசனை நடத்தி உறுப்பினர் சேர்க்கைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.

    இந்நிலையில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக புதிய நிர்வாகிகளை கட்சி தலைவர் விஜய் நேற்று நியமனம் செய்தார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகின்றோம். 2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.

    இதன் முதற்கட்டமாக உறுப்பினர்கள் சேர்க்கை அணியை உருவாக்கியுள்ளோம். மகளிர் தலைமையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணியினர் கழக தோழர்களோடு இணைந்து மக்களுக்கு உதவி செய்வார்கள்" என குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை இன்று மாலை சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

    உறுப்பினர் சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    முதல் உறுப்பினராக கட்சி தலைவர் விஜய் சேர்ந்தார். இதன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    வீடியோவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக நான் பதிவு செய்துவிட்டேன், நீங்களும் பதிவு செய்ய வேண்டும்" என தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும்,"வாட்ஸ் அப், டெலிகிராம், தொலைபேசி எண் வாயிலாகவும் கட்சியில் உறுப்பினராக இணையலாம் எனவும், தமிழ்நாட்டு வெற்றிக்கான நமது பயணத்தில் தோழர்களாய் ஒன்றிணைவோம்" எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×