search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Periyar, Annadurai and Vijay
    X

    பெரியார்! திராவிடம்! சமூகநீதி! ஆன்மிகம்! - விஜயின் அரசியல் பாதை எதை நோக்கி பயணிக்கும்?

    • அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.
    • பெரியாரை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.

    தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையை பிரிக்கவே முடியாது. திரைப் பிரபலங்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் தமிழகத்தில் அதிகம். இதே போன்று பிரபலங்களாக இருந்தும், அரசியலில் வெற்றியின்றி காணாமல் போனவர்களும் உண்டு.

    திரைத்துறை சார்பு மட்டுமின்றி தமிழக அரசியலில் இன்றும் பெருமளவு வாக்கு வங்கி பெரியார் மற்றும் திராவிட சித்தாந்தங்களின் அடிப்படையில் தான் சுழல்கிறது. திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் பெரியார் மண் என்று அழைக்கப்படும் தமிழ் நாட்டில்- திராவிடம், பெரியார், சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை தவிர்த்து அரசியல் செய்வது எளிய காரியமில்லை.


    பெரியார் வழி வந்த தமிழக அரசியல் தலைவர்களான அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ராமச்சந்திரன் ஆகியோர் திராவிட சித்தாந்தம் பேசியே தமிழக அரசியலில் சாதித்தனர். தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சியாக உள்ள அதிமுக-வும் திராவிடம் மற்றும் சமத்துவ கொள்கைகளை பேசியே மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது.

    இடையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களமிறங்கிய நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவரும் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்ததோடு, திராவிட கொள்கைகளை ஒட்டியே தனது அரசியல் பயணம் மேற்கொண்டார். உணர்ச்சிகர பேச்சு, வெளிப்படைத் தன்மை காரணமாக தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக உருவெடுத்த விஜயகாந்த் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்து வெற்றி பெற்றார்.


    அந்த வரிசையில், தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள விஜய்- தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். இதுவரை கட்சி பெயர், கொடி மற்றும் அறிமுக பாடலை மட்டும் வெளியிட்டுள்ள விஜய், தனது கட்சியின் கொள்கை பற்றி இதுவரை பேசவில்லை. தமிழக அரசியலில் புதுவரவு கட்சியான "தமிழக வெற்றிக் கழகம்" 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது.

    அரசியல் கட்சி தொடர்பான முதல் அறிவிப்பில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவ கொள்கைப்பற்று கொண்டிருப்போம் என்று உரக்க தெரிவித்தார் விஜய். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் அறிக்கைகள் அனைத்திலும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்பது அக்கட்சியின் வாசகமாக இடம்பெற்று வருகிறது.

    விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் ஒவ்வொரு நகர்வுகளையும் உற்று நோக்கும் போது, அவர் திராவிட வழியில் பயணம் செய்வதாகவே தெரிகிறது. இதனை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி பொது நிகழ்வுகளுக்கு கூறும் வாழ்த்து செய்திகளும் அப்பட்டமாக எடுத்துக் காட்டியுள்ளன. மேலும், மாணவர்களிடையே பேசிய விஜய் அவர்களிடம், அம்பேத்கர், பெரியார் பற்றி படிக்க வலியுறுத்தி இருந்தார்.


    இந்த வரிசையில், பெரியாரின் 146 ஆவது பிறந்த நாளில் அவரது நினைவிடம் அமைந்துள்ள பெரியார் திடலுக்கு நேரில் சென்ற பெரியார் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக பொது இடத்தில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தி இருக்கிறார்.

    அரசியல் தலைவராக முதல்முறை பொது நிகழ்வை தந்தை பெரியார் பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் விஜய் நடத்தி இருப்பது தமிழக அரசியலில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்துள்ளது. இதுவரை விஜய் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் சமத்துவம், சமூக நீதி ஆகிய கருத்துக்களை சார்ந்தே இருந்து வந்துள்ளது.

    தமிழக அரசியலில் திராவிடம், சமூகநீதி, சமத்துவம் தவிர்த்து பிரதான கட்சியாக வளர்ச்சி பெற முடியாது என்பதில் விஜய் கவனமுடன் செயல்பட்டு வருவதையே இவை உணர்த்துகின்றன. அரசியலில் தனது சீனியர்கள் பயணத்த பாதை, தமிழக அரசியல் வரலாறு ஆகியவற்றை கூர்ந்து கவனிக்கும் நபராக விஜய்யின் அரசியலை பார்க்க முடிகிறது.


    தமிழகத்தில் திராவிடம், கடவுள் மறுப்பு, சமூகநீதி கருத்துக்களை பேசி வரும் ஆளும் கட்சியான திமுக, பெயரளவில் திராவிட, சமூகநீதி கருத்துக்களை வலியுறுத்தும் அதிமுக, தமிழ் தேசம் பேசும் நாம் தமிழர் என அரசியல் கட்சிகளின் பயணத்தை நாம் வரையறுக்கலாம்.

    இந்த நிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை, திராவிடம், சமூகநீதி ஆகியவற்றை வலியுறுத்துமா? ஆன்மிக அரசியல் குறித்து விஜய் என்ன நிலைப்பாடு கொண்டுள்ளார்? தமிழக அரசியலில் அவர் முன்னெடுக்கப் போகும் பாதை எதை சார்ந்து இருக்கும்? என அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள், பொது மக்கள் மற்றும் அவரது ரசிகர் பட்டாளம் என ஒட்டுமொத்த தமிழகத்தின் கேள்விகளுக்கு விஜயின் முதல் அரசியல் மாநாட்டில் பதில் கிடைக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..!

    Next Story
    ×