search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எங்களை தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க செல்வம் மாமா - உதயநிதி ஸ்டாலின் உருக்கம்
    X

    எங்களை தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க செல்வம் மாமா - உதயநிதி ஸ்டாலின் உருக்கம்

    • முரசொலி செல்வம் மாமா மறைவால் ஆற்ற முடியாத துயரில் உறைந்து நிற்கிறேன்.
    • செல்வம் மாமா இனி வர மாட்டார் என்று நினைக்கும்போது நெஞ்சம் கலங்குகிறது.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி மாறனின் சகோதரரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்.

    இந்நிலையில், முரசொலி செல்வம் மறைவுக்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "எங்களைத் தவிக்க விட்டுட்டு, எங்கே போனீங்க... செல்வம் மாமா! திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் 'முரசொலி' செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது. இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

    கலைஞர் அவர்களின் கொள்கை வார்ப்பு. கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய வழிகாட்டி, செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர். 'முரசொலி' செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு. இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்.

    இயக்கப் பணி - பத்திரிகைப் பணி - திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன். அவருடன் நெருங்கிப் பழகியவன். கலைஞர் அவர்களைப் போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகின்ற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும். அப்படிப்பட்ட செல்வம் மாமா, 'இனி, வர மாட்டார்' என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது.

    நல்லது, கெட்டது எல்லாத்துலயும், இன்னைக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற குறையை எனக்குப் போக்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய முரசொலி செல்வம் அவர்கள் தான்." என்று நம்முடைய கழகத்தலைவர் அவர்கள், 'முரசொலி நினைவலைகள் நூல் வெளியீட்டு விழாவில் உருக்கத்துடன் கூறினார்கள்.

    கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில், 2019-ஆம் ஆண்டிலிருந்து கழகத்தில் கழக அரசில் நான் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வருகிறேன். அதனைக் காண்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தாலும், கலைஞர் அவர்கள் இடத்திலிருந்து அந்தக் கவலையைப் போக்கிடக் கூடியவராக முரசொலி செல்வம் மாமா அவர்கள்தான் இருந்தார்கள்.

    எதையுமே எளிய மக்களின் பார்வையிலிருந்து அணுக வேண்டும் என்ற 'உங்களின் குரல்' இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது மாமா! கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம். மாமா. எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா! என்றும் உங்கள் நினைவுகளோடு உதய்" என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×