search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வு ரத்து- மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
    X

    9 லட்சம் பேர் எழுதிய 'நெட்' தேர்வு ரத்து- மத்திய கல்வி அமைச்சகம் தகவல்

    • தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர்.
    • தேர்வு தொடர்பான முழுமையான விசாரணைக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சென்னை:

    நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.

    அதன்படி இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.

    தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்த நிலையில், நேற்று இரவு மத்திய கல்வி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகின.

    அதில், 'தேர்வு செயல்முறையின் வெளிப்படை தன்மையை உறுதிசெய்வதற்காக நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், புதிய தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட இருப்பதாகவும்' சொல்லப்பட்டு இருந்தது. மேலும் இந்த தேர்வு தொடர்பான முழுமையான விசாரணைக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×