search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது: கூட்டாளியை கொன்று ஆற்றில் வீசியது விசாரணையில் அம்பலம்
    X

    சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் அழைத்து வந்தபோது எடுத்த படம்


    கொலை வழக்கில் வரிச்சியூர் செல்வம் கைது: கூட்டாளியை கொன்று ஆற்றில் வீசியது விசாரணையில் அம்பலம்

    • தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
    • தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். நடமாடும் நகைக்கடை போன்று அதிக நகைகள் அணிந்து வலம் வரும் இவரிடம், விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் கூட்டாளியாக இருந்த வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் அவரை பிரிந்து சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பாயூரணியில் நடந்த ஊராட்சி தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் வழக்கில் சேர்த்திருந்தனர்.

    ஆனால் அவர் விசாரணையின்போது ஆஜராகவில்லை. இதையடுத்து எதிர்தரப்பினர் செந்தில்குமாரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள், செந்தில்குமாரை கண்டு பிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

    அதன்படி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனையின்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வரிச்சியூர் செல்வத்துடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    செந்தில்குமார் வரிச்சியூர் செல்வத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரது பெயரை போலீசார் சேர்த்திருந்தனர். தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி சென்னையில் இருந்த அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார். பின்னர் அதனை பார்சல் கட்டி நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வீசி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையுண்ட செந்தில்குமாரின் கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×