search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி நிரம்பியது
    X

    வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிப்பதை காணலாம்

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி நிரம்பியது

    • கடந்த வாரம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
    • கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதராமாக உள்ளது.

    இந்த ஏரிக்கு பருவ காலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

    கடந்த வாரம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

    தற்போது கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. சென்னை மாநகர் குடிநீருக்காக 63 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. வீராணம் ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது குறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட ஏற்பாடு நடைபெறும் என்றனர்.


    Next Story
    ×