என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாகன காப்பக உரிமையாளர் மிளகாய் பொடி தூவி படுகொலை- மர்ம நபர்கள் வெறிச்செயல்

    • ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆனந்தராஜ் மீது மிளகாய் பொடி தூவி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில்பட்டி:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் செல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இருளப்பன். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது 30). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகன காப்பகம் நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வாகன காப்பகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் நள்ளிரவு அங்கு தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை வாகன காப்பகத்திற்கு பயணிகள் சென்றனர்.

    அப்போது ஆனந்தராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், பொறுப்பு டி.எஸ்.பி. லோகேஸ்வரன் ஆகியோர் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

    நேற்று இரவு வாகன காப்பகத்தில் ஆனந்தராஜ் தூங்கி கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்மநபர்கள் ஆனந்தராஜ் மீது மிளகாய் பொடி தூவி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ஆனந்தராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ஆனந்தராஜ் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆனந்தராஜ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள புதிய பஸ் நிலையத்தில் வாகன காப்பக உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×