search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாய்மொழியின் அவசியத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்- வெங்கையா நாயுடு வேண்டுகோள்
    X

    விழாவில் எல்.ஆர்.ஈஸ்வரி, தோட்டா தரணி உள்ளிட்டோருக்கு முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்கியபோது எடுத்த படம்.


    தாய்மொழியின் அவசியத்தை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்- வெங்கையா நாயுடு வேண்டுகோள்

    • தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள்.
    • காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    தெலுங்கு சினிமாவில் பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மறைந்த கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் நூற்றாண்டு பிறந்த விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நேற்று மாலை நடந்தது. அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்த விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

    விழாவில் பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, கலை இயக்குனர் தோட்டா தரணி, டிரம்ஸ் சிவமணி, நாட்டிய கலைஞர்கள் நந்தினி ரமணி, சுதாராணி ரகுபதி, அவசரலா கன்யாகுமாரி, தாயன்பன் உள்ளிட்டோருக்கு கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார் விருதை வெங்கையா நாயுடு வழங்கினார்.

    மேலும் கண்டசாலா எழுதிய பகவத் கீதை நூல் நாட்டிய வடிவலான தொகுப்பாக யூ-டியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த யூ-டியூப் தளத்தையும், பழைய பாடல் தொகுப்பில் கண்டசாலா பாடல் இணைப்புக்கான புதிய தொகுப்பையும் வெங்கையா நாயுடு வெளியிட்டு பேசியதாவது:-

    தெலுங்கு சினிமா உலகில் 2 தலைமுறை ரசிகர்களை ஈர்த்த பெருமை கண்டசாலா வெங்கடேஸ்வரராவுக்கு உண்டு. அவரது படைப்புகளை, தொகுப்புகளை இளம் தலைமுறையினர் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். தனது மயக்கும் குரலால் ரசிகர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்திருந்த கலைஞர் அவர்.

    உலகளவில் அவரது குரலுக்கு அந்த ஈர்ப்பு சக்தி இருந்தது. அவரது பாடல்களும், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடல்களும் என்றுமே என்னால் மறக்கமுடியாதவை. கண்டசாலாவின் குரலுக்கு எப்போதுமே ஓய்வு கிடையாது. மனதை மகிழ்ச்சியாக்கும் வல்லமை அந்த குரலுக்கு இருக்கிறது. அவரது காலம் தெலுங்கு சினிமாவின் பொற்காலம். தமிழ் உள்பட பிறமொழிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளார்.

    தமிழக ரசிகர்கள் அதுவும் குறிப்பாக சென்னைவாசிகள் இசையை மிகவும் நேசிக்கக்கூடியவர்கள். பாரம்பரியம் நமக்கு மிக முக்கியமானவை. அதற்காக பாரம்பரியத்தை மதமாக பார்த்துவிட கூடாது. பாரம்பரியம் நமது வாழ்க்கை முறையை சார்ந்தது. அது மதம் ஆகாது.

    'அம்மா' என்ற வார்த்தையை சொல்லும்போது எவ்வளவு ஆனந்தமான உணர்வு நம்மில் ஏற்படுகிறது. ஆனால் நாம் நாகரிகமாக நினைத்து 'மம்மி' என்று அழைக்கிறோம். தாய்மொழியில் நம் அன்னையை அழைக்கும்போது கிடைக்கும் அந்த உணர்வு, பிற மொழிகளில் நிச்சயம் கிடைக்காது. எப்போதும் தாய்மொழிக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதலில் தாய்மொழி. அடுத்தது சகோதர மொழி. பின்னர்தான் வேற்றுமொழி. தாய்மொழியின் சிறப்பு அளவிட முடியாதது. நாகரிகம் என்ற பெயரில் நமது அடையாளத்தை மறக்கக்கூடாது.

    எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பிள்ளைகளுக்கு தாய்மொழியின் அவசியத்தை கற்றுக்கொடுங்கள். தாய்மொழியிலும் இசை கலந்திருக்கிறது. தாய் பாடும் தாலாட்டு அளப்பரிய இசை. இப்போது தாலாட்டை எங்கே கேட்க முடிகிறது. அதையெல்லாம் மறந்து போய்க்கொண்டு இருக்கிறோம். குழந்தை பருவத்தில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலுமே இசையின் தாக்கம் இருக்கும்.

    காலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்க்க வேண்டும் என்பதையே மறந்து போகிறோம். சூரியனை பார்க்க வேண்டும். அப்போது நம்மிடையே உற்சாகம் ஏற்படுவதை உணர முடியும். இதையெல்லாம் செய்யாமல் யூ-டியூப்பில் மூழ்கி கிடக்கிறோம். எனவே இதையெல்லாம் நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக விழாவில் பங்கேற்ற வெங்கையா நாயுடுவுக்கு தஞ்சாவூர் ஓவியங்கள் பரிசளிக்கப்பட்டன.

    விழாவில் தமிழக அரசின் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் மனைவி சாவித்ரி, சகோதரர் ரவி மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×