search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை விடுதலை சிறுத்தை மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு
    X

    பழைய நாடாளுமன்ற கட்டிட மாதிரியில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு முகப்பு.

    நாளை விடுதலை சிறுத்தை மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பு

    • இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
    • தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    திருச்சி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் ஜனநாயகம் என்ற தலைப்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நாளை ( வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு பிரம்மாண்ட மாநாடு நடை பெறுகிறது. அக்கட்சியின் அரசியல் வெள்ளிவிழா, கட்சித் தலைவரின் மணி விழா, இந்தியா கூட்டணி கட்சி தேர்தல் வெற்றிக்கான கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெறுகிறது.

    மாநாட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் எம்.எல்.ஏ. வரவேற்று பேசுகிறார். பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

    இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சா ரியார், திராவிடர் கழக தலைவர் கீ. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்மு ருகன் எம்எல்ஏ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், மாநாட்டு பொறு ப்பாளருமான பெரம்பலூர் இரா. கிட்டு உள்பட இந்தியா கூட்டணியில் உள்ள 28 கட்சிகளின் தலைவர்கள் கொள்கிறார்கள்.

    மேலும் தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எஸ். எஸ். சிவசங்கர் மற்றும் எம்பிக்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதையொட்டி சிறுகனூரில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வந்தன. தற்போது அந்தப் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மாநாடு நுழைவு வாயில் பகுதி முந்தைய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவில் பிரம்மாண்டமாக அமைத்துள்ளனர். முகப்பில் கட்சித் தலைவர் திருமாவளவனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமான மூலமாக திருச்சி வருகை தருகிறார். முன்னதாக சென்னையில் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை 5 மணிக்கு மேல் புறப்பட்டு திருச்சி வருகை தருகிறார். பின்னர் கார் மூலமாக சாலை மார்க்கத்தில் மாநாடு நடைபெறும் சிறுகனூருக்கு செல்கிறார்.

    முன்னதாக செல்லும் வழியில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் திறக்கப்பட்ட கலைஞர் சிலையை பார்வையிடுகிறார்.

    பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பாதுகாப்பு டிஐஜி திருநாவுக்கரசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நேற்று கலெக்டர் பிரதீப் குமார் மாநாடு பந்தல் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி, பெரம்பலூர் இரா. கிட்டு, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில நிர்வாகி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×