search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்: பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை
    X

    விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரம்: பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை

    • காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.
    • பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது.

    கோவை:

    ஜே.என்.1 கொரோனா தொற்று பரவ தொடங்கியதில் இருந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

    அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

    இதையடுத்து கேரளத்தையொட்டி உள்ள தமிழக எல்லையான கோவை மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் சுகாதாரத்துறை மூலம 4 நடமாடும் காய்ச்சல் கண்டறியும் குழு, 36 மருத்துவ குழுக்களும் அமைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் மாநகராட்சி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து வீடு, வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அருகே உள்ள சுகாதார மையம் மற்றும் ஆஸ்பத்திரிக்கு செல்ல அறிவுறுத்தி வருகின்றனர்.

    கோவை விமான நிலையத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதை அடுத்து, வெளிநாடுகளில் இருந்து கோவை வரும் பயணிகள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் செந்தில்வளவன் கூறியதாவது:-

    ஒவ்வொரு நாளும் சராசரியாக 23 முதல் 29 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு உதவும் வகையில் கோவை-மும்பை இடையே தினமும் காலை 9 மணிக்கும், இரவு 9 மணிக்கும் புதிய விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    இதுதவிர ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    உருமாறிய கொரோனா பரவலை கண்காணிக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் கண்டறியும் உபகரணங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுதவிர முதியவர்கள் குழந்தைகளுடன் வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு உதவும் வகையில் பிரத்யேகமாக மே ஐ ஹெல்ப் யூ சேவை கோவை விமான நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×