என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மலைவாழ் கிராமங்களுக்கு செல்லும் பாதையில் உள்ள கூட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளதை காணலாம்.
கூட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் தனித்தீவாக மாறிய உடுமலை வனப்பகுதி
- கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் தனித்தீவாக மாறியுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதுதவிர கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சி வயல், கீழானவயல், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, குழிப்பட்டி, குருமலை, மேல் குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி, முள்ளுப்பட்டி, கரட்டுபதி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகின்றனர். மலைவாழ் மக்கள் ரேஷன், மருத்துவ சிகிச்சை, உயர்கல்வி, சாகுபடி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வதற்காக சமதளபரப்பிற்கு சென்று வரவேண்டி உள்ளது.
ஒருசில மலைவாழ் குடியிருப்புகளை தவிர மற்ற பகுதியில் பாதை அமைக்கப்படவில்லை. இதனால் வன விலங்குகளால் ஏற்படுத்தப்பட்ட ஒற்றையடி பாதையை அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அமராவதி வனச்சரகத்தில் உட்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், மஞ்சம்பட்டி போன்ற மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வருவதற்கு உடுமலை-மூணாறு சாலையில் இருந்து கூட்டாறு வழியாக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அதன் வழியாக மலைவாழ் மக்கள் மருத்துவம், கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக உடுமலை மற்றும் கேரள மாநிலங்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் மழைக்காலங்களில் கூட்டாற்றில் வெள்ளம் ஏற்படுவதால் அதை கடந்து செல்ல முடியாமல் மலைவாழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே கூட்டாற்றில் உயர்மட்ட பாலம் அமைத்து தருமாறு மலைவாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அமராவதி வனப்பகுதியில் மூன்று ஆறுகள் ஒன்றிணையும் கூட்டாற்றில் தண்ணீர் அதிகரித்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி சம்பக்காட்டு வழிப்பாதையின் குறுக்காக செல்கின்ற ஓடையிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல் உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகள் தனித்தீவாக மாறியுள்ளது. மேலும் இந்த பகுதி மக்கள் சமதள பரப்புக்கு வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கால் ஆற்றைக் கடக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் மலைவாழ் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே கூட்டாற்றின் குறுக்காக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






