search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணை
    X

    கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 7507 கனஅடியாக அதிகரிப்பு

    • தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது.
    • மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது.

    சேலம்:

    கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர் மழையின் காரணமாக 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.50 அடியை எட்டியிருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 673 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2507 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதே போல் 84 அடி உயரம் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.73 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 5481 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 507 கனஅடி தண்ணீர் அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் நாளை காலை முதல் தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அங்கு இருந்து நாளை மாலைக்குள் மேட்டூர் அணைக்கு அந்த தண்ணீர் வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வரும் நிலையில் இனி வரும் நாட்களில் காவிரியில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி கூடுதலாக தண்ணீர் திறந்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயரும்.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 41.97 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 87 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 13.12 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×