search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாரத ஸ்டேட் வங்கி சொன்னது அப்பட்டமான பொய்: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்
    X

    பாரத ஸ்டேட் வங்கி சொன்னது அப்பட்டமான பொய்: அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன்

    • தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது.
    • தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வாங்கி சமர்ப்பித்துள்ளது.

    வங்கி மூலம் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பெறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 15-ந்தேதி வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    தேர்தல் நன்கொடை பத்திர முறையை உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இந்த திட்டத்தின் கீழ் நன்கொடை அளித்தவர்களின் முழு விவரங்களை மார்ச் 6-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி பகிர வேண்டும். அவற்றை மார்ச் 13ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக தேர்தல் ஆணையம் தன்னுடைய இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் ஊழலுக்கு வழிவகுக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

    இதனையடுத்து 2019 ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்து தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க ஜூன் 30-ந்தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை வெளியிட வேண்டும் என்று எஸ்.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

    இந்நிலையில், தேர்தல் பத்திர விவரங்களை இன்று தேர்தல் ஆணையத்தில் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஒரே நாளில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தரவுகளை வங்கியால் வழங்க முடியும் என நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அதை தான் இன்று பாரத ஸ்டேட் வங்கி செய்திருக்கிறது. மார்ச் 4 ஆம் தேதி எங்களால் அந்த அவகாசத்துக்குள் தரவுகளை வழங்க முடியாது என்று அப்பட்டமாக பொய் சொன்ன SBI நிர்வாகிகள் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    Next Story
    ×