என் மலர்
தமிழ்நாடு
பாலின தாக்குதலுக்கு ஆளானதாக புகார்: சந்திரபிரியங்கா குற்றம்சாட்டியது யார்?
- யூனியன் பிரதேசமான புதுவையில் அமைச்சர் பதவி உயர்பதவிகளில் ஒன்று.
- சந்திரபிரியங்காவுக்கு சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலை ஏற்படுத்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
ராஜினாமா குறித்து தொகுதி மக்களுக்கு அவர் கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், தான் சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்ந்ததாகவும், ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்தே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறியுள்ளார்.
இது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்காவுக்கு சாதிய ரீதியிலும், பாலின ரீதியிலும் தாக்குதலை ஏற்படுத்தியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
யூனியன் பிரதேசமான புதுவையில் அமைச்சர் பதவி உயர்பதவிகளில் ஒன்று. அதிலும் கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண் புதுவை அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் நடந்த கூட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் புதுவை பெண் அமைச்சர் தனக்கு பாலின தாக்குதல் நடந்திருப்பதாக புகார் கூறியிருப்பது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.