search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆளும் கட்சியின் ஏஜென்சியா காவல்துறை? - உயர் நீதிமன்றம் கேள்வி
    X

    ஆளும் கட்சியின் ஏஜென்சியா காவல்துறை? - உயர் நீதிமன்றம் கேள்வி

    • மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
    • மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

    அவர் விசாரணையின் போது கேட்டதாவது:

    ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    Next Story
    ×