search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பலாப்பழங்களை ருசி பார்த்த காட்டு யானை- பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்
    X

    பலாப்பழங்களை ருசி பார்த்த காட்டு யானை- பட்டாசு வெடித்து விரட்டிய வனத்துறையினர்

    • மரத்தின் மீது டார்ச் லைட் அடித்து பார்த்தபோது யானை பலாப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பக்கத்து தோட்டத்துக்குள் யானை வந்துவிடக்கூடாது என்பதற்காக யானையை விரட்ட முயன்றார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த 2 மாதமாக கடும் வெப்பம் பதிவாகி வந்ததால் வனப்பகுதியில் வறட்சி நிலவியது. நீர்நிலைகள் வறண்டதால் வனவிலங்குகள் உணவு, குடிநீர் தேடி ஊருக்குள் வருவது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளைநிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.

    இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தாளவாடி அடுத்த நெய்தாலபுரம் அம்மன் கோவில் அருகே உள்ள பலாப்பழம் மரத்தின் மீது தனது இரு கால்களை கீழ் வைத்தும், மற்றொரு இரு கால்களையும் மரத்தின் மீது வைத்து பலாப்பழங்களை பறித்து ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது. அதன் அருகே விவசாய தோட்டத்தில் காவலில் இருந்த விவசாயி ஒருவர் யானை சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் வந்து மரத்தின் மீது டார்ச் லைட் அடித்து பார்த்தபோது யானை பலாப்பழத்தை சாப்பிட்டு கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பக்கத்து தோட்டத்துக்குள் யானை வந்துவிடக்கூடாது என்பதற்காக யானையை விரட்ட முயன்றார். ஆனால் அந்த காட்டு யானை அந்தப் பகுதியை விட்டு அசையவில்லை. உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு விரட்டினர். இப்பகுதியில் யானை நடமாட்டம் உள்ளதால் நெய்தாலபுரம் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×