search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மஞ்சூரில் அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த காட்டு யானைகள்
    X

    அரசு பஸ்சை வழிமறித்து நின்ற காட்டு யானைகள் கூட்டம்.

    மஞ்சூரில் அரசு பஸ்சை குட்டியுடன் வழிமறித்த காட்டு யானைகள்

    • யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
    • சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குன்னுார் சுற்றுப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றது.

    இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.

    இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது. கடந்த 2 தினங்களாக 6 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது.

    சம்பவத்தன்று மாலை கோவையில் இருந்து பில்லூர் பகுதிக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை முள்ளி பிரிவு அருகே குட்டியுடன் காணப்பட்ட 5 காட்டு யானைகள் வழிமறித்தது. யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.

    அப்போது மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. காட்டு யானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது. இதன்பிறகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதேபோல் நேற்றும் அரசு பஸ் மற்றும் வாகனங்களை குட்டியுடன் வந்த காட்டு யானைகள் வழிமறித்தன. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் சென்றதும், வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    மஞ்சூர்-கோவை சாலையில் காட்டுயானைகள் மீண்டும் நடமாடி வருகிறது. 2 குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் எதிர்பட்டால் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்த வேண்டும். யானைகளை கண்டவுடன் கூச்சலிடுவது, வாகனங்களில் இருந்து இறங்கி செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. யானைகள் சம்பவ இடத்தில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதை உறுதி செய்த பிறகே வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×