search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்தபடி கதறி அழுது போலீசாரிடம் இருந்து மீட்ட பெண்- மனதை உருக்கும் சம்பவம்
    X

    கணவரை போலீசாரிடம் இருந்து காப்பாற்றி கட்டி அணைத்து கதறும் மனைவி.

    ஜெயில் வாசல் முன்பு கணவரை கட்டிப்பிடித்தபடி கதறி அழுது போலீசாரிடம் இருந்து மீட்ட பெண்- மனதை உருக்கும் சம்பவம்

    • மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர்.

    செங்கல்பட்டு:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன் (32). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் லேப்-டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனது.

    இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் வக்கீலும் இருந்தார்.

    ஜெயிலில் இருந்து மோகன் வெளிய வந்ததும் அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

    அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த கேளம்பாக்கம் போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர். அவர்கள் மோகனை வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்ற இழுத்து சென்றனர். இதனை கண்ட மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வக்கீலும் பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? பிடிவாரண்டை காட்டிவிட்டு மோகனை அழைத்து செல்லுங்கள் என்றார்.

    எனினும் இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் மோகனை தங்களது வாகனத்தில் ஏற்றி செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மோகனின் மனைவி தவித்தார்.

    திடீரென அவர் தனது கணவர் மோகனை கட்டி அணைத்தபடி கதறி அழுதார். மேலும் தனது மகனையும் ஒரு கையில் வைத்தபடி போலீசாரிடம் கெஞ்சினார். இதனால் ஜெயில் வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனைவியின் பாசப்போட்டம் அங்கிருந்தவர்களின் மனதை கனக்க செய்தது.

    இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து நேரத்தில் கணவர் மோகனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்து உள்ளன. இதுபற்றி மோகனிடம் விசாரிக்க முடிவு செய்து வந்தோம் என்றனர்.

    Next Story
    ×