search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துப்பாக்கி சூட்டில் தொழிலாளி பலி: மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு
    X

    துப்பாக்கி சூட்டில் தொழிலாளி பலி: மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்க முடிவு

    • ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர்.
    • நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் வண்ணாத்திப் பாறை காப்புக்காட்டில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகள் வேட்டையாடப் படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மின்வேலி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்தபோது குள்ளப்பகவுண்டன் பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என்பவர் அப்பகுதியில் பதுங்கி இருந்தார். வனத்துறையினரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றுள்ளார். அப்போது ஈஸ்வரனுக்கும், வனத்துறையினருக்கும் இடையே நடந்த தகராறில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

    இதில ஈஸ்வரன் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து கூடலூர் ரேஞ்சர் முரளிதரன், லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    துப்பாக்கிச்சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தது தெரியவரவே அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் கேட்காமல் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஈஸ்வரன் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தேனி எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்கரே, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் ஆனந்த், உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் ராமநாதன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் ஈஸ்வரனின் குடும்பத்தினரும், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்துவிடம் புகார் அளித்தனர். அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்டு மறுநாள் காலையில் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். ஒரு குற்றவாளி மீது எண்கவுண்டர் நடத்துவது போல வனத்துறைக்கு துப்பாக்கியால் சுட அதிகாரம் கொடுத்தது யார்? எனவே இப்பிரச்சினையில் போலீசாரும் எங்களை சமாதானம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. எனவே நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம். அவர்கள் விசாரணை நடத்தினால்தான் இதில் உண்மை வெளிவரும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்துவதற்கும் நாங்கள் அனுமதி அளிக்காமல் கையெழுத்திட மறுத்துவிட்டோம் என்றனர்.

    இறந்த ஈஸ்வரன் மீது ஏற்கனவே அவர் அமைத்த மின்வேலி தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு உள்பட 2 வழக்குகள் உள்ளன. இவர் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட வனப்பகுதியில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததால்தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

    இன்று தேனி அரசு மருத்துவக்கல்லூரி முன்பு 2ம் நாளாக ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.

    Next Story
    ×