search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மூட நம்பிக்கையால் காதலனை விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்
    X

    ஷாரோன்ராஜ், கிரீஷ்மா.

    மூட நம்பிக்கையால் காதலனை விஷம் கொடுத்து கொன்ற இளம்பெண்

    • பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்
    • ஷாரோன்ராஜ் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்ட எல்லையான பாறசாலை முறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23). இவர் குமரிமாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று காதலை வளர்த்தனர். இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி ஷாரோன்ராஜ், நண்பர் ஒருவருடன் காதலி வீட்டுக்கு சென்றார்.

    அங்கிருந்து திரும்பி வந்தவர், வயிறு வலிப்பதாக நண்பரிடம் கூறியுள்ளார். உடனே அவர் பாறசாலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் கொடுத்தனர். அதில் தனது மகன் ஷாரோன்ராஜை அவரது காதலி குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக கூறியிருந்தனர்.

    மேலும் ஷாரோ ன்ராஜின் காதலிக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும், அவருக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறப்பட்டதால், தனது மகனை திட்டமிட்டு கொன்றுவிட்டு, கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க நிச்சயம் செய்து இருப்பதாகவும் கூறினார்.

    இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போலீஸ் ஏடிஜிபி அஜித் குமார் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள் ஷாரோன்ராஜின் காதலி கிரீஸ்மாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் காதலன் ஷாரோன்ராஜூக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். காதலனை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி போலீசாரிடம் அவர் கூறியதாவது:-

    ஷாரோன் ராஜூம் நானும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அடிக்கடி இருவரும் வெளியூர்களுக்கு சென்று வந்தோம். ஷாரோன் ராஜ் என்னை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.

    இதையடுத்து அவரை நான் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றேன். அங்கு அவர் என் நெற்றியில் குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

    இதற்கிடையே பெற்றோர் எனக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதனை நான் ஷாரோன் ராஜிடம் தெரிவித்தேன். மேலும் என்னை மறந்து விடும்படியும் கூறினேன்.

    ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்தார். இதனால் நான் அவரை வீட்டுக்கு அழைத்து குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுபற்றி போலீஸ் ஏ.டி.ஜி.பி. அஜித்குமார் கூறும்போது, ஷாரோன் ராஜின் தந்தை மூடநம்பிக்கை காரணமாக தனது மகனை கொன்றுவிட்டதாக கூறியுள்ளார்.

    அதாவது கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் கூறியிருப்பதாகவும், அதற்காக அவருக்கு இன்னொருவருடன் திருமண ஏற்பாடு செய்து விட்டு தனது மகனை கிரீஷ்மாவின் குடும்பத்தினர் திட்டமிட்டு கொன்று விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பற்றியும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.

    கேரளாவில் ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இப்போது மூடநம்பிக்கை காரணமாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×