search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுபோதை தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை: 6 பேர் கைது
    X

    கொலை செய்யப்பட்டவர் வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டிருந்த காட்சி - (உள்படம்: ரெஜின்)

    மதுபோதை தகராறில் வாலிபர் கல்லால் தாக்கி கொலை: 6 பேர் கைது

    • ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.
    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே குழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ரெஜின் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (30). இவர்கள் இருவரும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக மது அருந்தும்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரெஜின் நண்பர் அனீசை தாக்கியதாக தெரிகிறது.

    படுகாயம் அடைந்த அனீஸ் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அனீஸ் கொடுத்த புகாரின் பேரில் ரெஜின் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் ரெஜின், ராஜேஷ் இருவரும் மது அருந்திவிட்டு குழிக்கோடு பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள. கத்தியால் குத்தியதுடன் அந்த பகுதியில் கிடந்த கம்பியாலும், கற்களாலும் தாக்கியதில் ரெஜின் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. படுகாயம் அடைந்த ரெஜினை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரெஜின் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜேஷ் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் ரெஜினை தாக்கியது கோழிப்போர்விளை பழ விளையை சேர்ந்த வினித் (24) கூட்டமாவு பகுதியை சேர்ந்த பரத் லியோன் (24), குழிக்கோட்டை சேர்ந்த அருண் (23), ஜெபின் (24), ஜிஜிஸ் (24) மற்றும் கோழிப்போர்விளையை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கைது செய்யப்பட்ட வினித், பரத் லியோன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×