search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலாம் ஆண்டு குரு பூஜை- விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை 25  ஆயிரம் பேருக்கு அன்னதானம்
    X

    முதலாம் ஆண்டு குரு பூஜை- விஜயகாந்த் நினைவிடத்தில் நாளை 25 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

    • மறைந்த தே.மு.தி.க. தலைவரான கேப்டன் விஜயகாந்த் எங்கள் அனைவருக்கும் குருவாக திகழ்ந்தவர்.
    • கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டியுள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைந்து ஓராண்டு ஆகிறது. அவரது நினைவு தினத்தை ஆண்டுதோறும் குரு பூஜை தினமாக கடைபிடிக்க தே.மு.தி.க.வினர் முடிவு செய்து உள்ளனர்.

    இதன்படி முதலாம் ஆண்டு குரு பூஜை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் நடைபெறுகிறது.

    இந்த குரு பூஜையில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தே.மு.தி.க. துணை செயலாளர்களான எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று இதற்கான அழைப்பிதழ்களை வழங்கி உள்ளனர். இதனை ஏற்று நாளை அரசியல் கட்சி தலைவர்கள் விஜயகாந்த் நினைவு இடத்தில் திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா தலைமையில் நாளை காலை 8.30 மணி அளவில் கோயம்பேடு மேம்பாலத்தை ஒட்டியுள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் இருந்து அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

    தே.மு.தி.க. அலுவல கத்தை ஊர்வலம் வந்தடைந்ததும் அங்கு தே.மு.தி.க. நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்கிறார்கள்.

    இதுதொடர்பாக தே.மு.தி.க. துணை செயலாளரான எல்.கே.சுதீஷ் கூறியதாவது:-

    மறைந்த தே.மு.தி.க. தலைவரான கேப்டன் விஜயகாந்த் எங்கள் அனைவருக்கும் குருவாக திகழ்ந்தவர். இதன்படி அவரது நினைவு நாளை குரு பூஜை தினமாக அனுசரிக்க வேண்டும் என்று எங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விருப்பம் தெரிவித்தனர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளை குரு பூஜை தினமாக கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம். இந்த ஆண்டு முதலாம் ஆண்டு குரு பூஜை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி விஜயகாந்த் கேப்டன் ஆலயத்துக்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு உள்ளது. 25 ஆயிரம் பேர் சாப்பிடும் அளவுக்கு நாளை அன்னதானம் நடைபெறுகிறது.

    பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உள்ளே வருவதற்கு தனி வழியும் வெளியே செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வதற்கும் தனி வழி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நாளை நடைபெற உள்ள கேப்டனின் முதலாம் ஆண்டு குரு பூஜையில் தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று மரியாதை செலுத்த இருப்பதால் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம்.

    இவ்வாறு எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

    நாளை நடைபெற உள்ள விஜயகாந்தின் முதலாம் ஆண்டு குரு பூஜையையொட்டி அவரது நினைவிடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் வாகனங்களை பாதுகாப்புக்காக நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    Next Story
    ×