என் மலர்
தமிழ்நாடு

தேசிய கல்விக்கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு ரூ.2,400 கோடி நிதி- மத்திய அரசு மீண்டும் திட்டவட்டம்

- தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது.
- மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.
சென்னை:
நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வதற்கும், அவர்களுக்கு பாகுபாடின்றி தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் மத்திய அரசு சமக்ரா சிக்ஷா என்ற அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 8 வடகிழக்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதம் ஆகும். மாநில அரசு பங்களிப்பு 40 சதவீதம் ஆகும்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.2,120.25 கோடி விடுவிக்க வேண்டும். ஆனால் அதில் ரூ.1,871.96 கோடி மட்டுமே விடுவித்தது. ரூ.248.29 கோடியை வழங்காமல் நிறுத்தி விட்டது. அதற்கு காரணம், தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணையவில்லை என்று கூறியது.
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பிஎம்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தினால், அது மத்திய அரசின் தேசிய கொள்கையை ஏற்று கொண்டது போல் ஆகிவிடும். மேலும் தமிழக அரசின் கொள்கையான 2 மொழி கொள்கைக்கு பதில் 3 மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டிய நிலை வந்துவிடும் என்றுகூறி எதிர்ப்பு தெரிவித்தது.
எனவே தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கூறியது. ஆனால் அதனை மத்திய அரசு எற்று கொள்ளவில்லை. எனவே மத்திய அரசு, 2023-24-ம் ஆண்டில் விடுவிக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்க நிதி ரூ.248.29 கோடியை விடுவிக்கவில்லை. அதுமட்டுமின்றி 2024-25-ம் ஆண்டுக்கான ரூ.2,151.59 கோடியை வழங்காமல் உள்ளது. ஆக மொத்த மத்திய அரசு ரூ.2,399.88 கோடி நிதி ஒதுக்க வேண்டி உள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் மத்திய அரசு, பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை விடுவிக்க முடியும் என்று கூறியது.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய அனைவருக்கும் கல்வி இயக்கம் நிதி குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு 2024-25 கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பிஎம்ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமது உறுதிமொழியை கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதி அளித்தது. அதன்பின், பள்ளி கல்வி மற்றும் எழுத்துத்திறன் துறை, தமிழக அரசுக்கு ஒரு ஒப்பந்த வரைவு அனுப்பியது. ஆனால் கடந்த ஜூலை 6-ந்தேதி தமிழக அரசு ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தத்தை அனுப்பியது. அதில் தேசிய கல்வி கொள்கை 2020-ஐ முழுமையாக செயல்படுத்துவது தொடர்பான முக்கியமான பத்தி நீக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மாற்றங்கள் இல்லாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழக அரசிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதாவது தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பது தெரியவருகிறது.