search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2ம் கட்ட சிறப்பு முகாம்- வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன்
    X

    2ம் கட்ட சிறப்பு முகாம்- வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ பரந்தாமன்

    • தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்.
    • தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் 2வது கட்ட வாக்காளர் சிறப்பு முகாம் நாளை (23ம் தேதி), நாளை மறுதினம் (24ம் தேதி) நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

    தமிழகம் முழுவதும், சுமார் 68 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர்.

    இந்நிலையில், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ ஐ. பரந்தாமன் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதுகுறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், " எழும்பூர் தொகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியானவர்கள், வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்.? என்ன செய்ய வேண்டும்… எப்படி செய்ய வேண்டும்... உங்களுக்கான பதிவுதான் இது..!" என குறிப்பிட்டிருந்தது.

    மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    நம் அனைவருக்கும் வாக்களிப்பது என்பது ஜனநாயக கடமை. தேர்தல் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரை தேடி பார்த்துவிட்டு இல்லை என்று ஏமாற்றம் அடைவதைவிட சிறப்பு முகாமை பயன்படுத்தி பெயர் பதிவு செய்துக் கொள்ளலாம்.

    இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. அதன்படி, இம்மாதம் நாளை மற்றும் நாளை மறுநாள் (23ம், 24ம் தேதிகளில்) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    யார் யாருக்கெல்லாம் உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையோ அவர்களும், வரும் ஜனவரி மாதத்தில் 18 வயது பூர்த்தி செய்யும் இளைஞர்களும் வாக்காளர் சிறப்பு முகாமிற்கு சென்று பெயரை பதிவு செய்துக் கொள்ளலாம்.

    ஏற்கனவே பதிவு செய்தவர்கள் பிழை ஏதேனும் இருந்தால் அதை திருத்திக் கொள்ளலாம். முகவரி மாறியிருப்பவர்கள், எழும்பூர் தொகுதிக்கு குடிவந்தவர்கள், அடுத்த முறை எழும்பூர் தொகுதியில் இருந்து வாக்கு செலுத்த நினைப்பவர்கள் முகவரியை மாற்றிக் கொள்ளலாம்.

    அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, தேர்தல் நேரத்தில் தங்களின் இருப்பிடத்தின் அருகாமையில் செயல்படும் வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். அங்கு, வாக்காள அதிகாரிகள் இருப்பார்கள். திமுகவின் நிர்வாகிகளும் தங்களுக்கு உதவ காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    நீங்கள் அங்கு செல்லும்போது 18 வயது பூர்த்தியானதற்கான ஆதாரமாக பிறப்புச் சான்றிதழ் அல்லது படிப்புச் சான்றிதழ் உடன் எடுத்துக் செல்லவும்.

    முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இருப்பிடச் சான்றிதழுக்கு அட்டாச்சியாக பேங்க் பாஸ் புக், கேஸ் பில், குடும்ப அட்டை, ஆதார் கார்டு, சொத்து பத்திரம் ஆகியவை உடன் எடுத்துச் செல்லுங்கள்.

    இந்த ஆவணங்களை எடுத்துச் செல்லும்போது அங்கு தரப்படும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.

    வாக்காளர் சிறப்பு முகாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுவதால் விடுமுறை தினத்தை வீட்டில் இருந்தே கழிக்கலாம் என்று நினைக்காதீர்கள்.

    இந்த இரண்டு நாட்களில் உங்களுக்கு சவுகரியப்படக்கூடிய ஒரு நாளில் 10 நிமிடம் செலவழித்து பதிவு செய்துக் கொள்ளுங்கள்.

    எழும்பூர் தொகுதி மக்கள் உங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தல் போன்றவற்றை சிறப்பு முகாமில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×