என் மலர்
தமிழ்நாடு
சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு- அமலுக்கு வந்தது
- தொழில் வரி என்பது 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும்.
- இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி மிகப்பெரிய வருமானமாக உள்ளது. 2023-2024-ம் ஆண்டில் தொழில் வரி மட்டும் ரூ.532 கோடி கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தொழில் வரியை மாநகராட்சி உயர்த்தி இருக்கிறது. 35 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் வரி என்பது 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். 6 மாதத்துக்குள் ரூ.21 ஆயிரம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டுப வர்களுக்கு ரூ.135-ல் இருந்து ரூ.180 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30,001 முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.425 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வருடத்துக்கு ரூ.630 கட்டியவர்கள் இனி ரூ.850 கட்ட வேண்டும். அதே போல ரூ.45,001 முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் ரூ.690-க்கு பதில் ரூ.930 கட்ட வேண்டும்.
ரூ.60,001 முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், அதே போல் ரூ.75 ஆயிரத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களும் பழைய வரியை கட்டினால் போதும். அவர்களுக்கு வரி உயர்த்தப்படவில்லை.
இந்த வரி உயர்வுக்கு மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரையாண்டு முதல் இந்த வரி உயர்வு அமலுக்கு வருகிறது.