search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போதை பொருட்கள் விற்பனை: சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது
    X

    போதை பொருட்கள் விற்பனை: சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 மாணவர்கள் உட்பட 4 பேர் கைது

    • ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    திருச்சி:

    திருச்சி வயலூர் ரோட்டில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 4 பேர் பிடிபட்டனர்.

    விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த ஆல்வின்(23).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.

    திருச்சி ராஜா காலனி பகுதியை சேர்ந்தவர் நகுல் தேவ் (21). இவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.1லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

    கைதான போதைப்பொருள் விற்பனை கும்பலுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டு வருகிறார்.

    மேலும் கடத்தலுக்கு கோவையை சேர்ந்த ஒருவர் ஏஜென்டாக செயல்பட்டதும் தெரியவந்தது.

    இவர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மேற்கண்ட போதைப் பொருள் ஆப்கானிஸ்தானில் இருந்து கப்பல்கள் மற்றும் படகுகள் மூலமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்டது.

    கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து இந்த போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர்.

    Next Story
    ×