என் மலர்
தமிழ்நாடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 6.40 லட்சம் பேர் பயணம்
- மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
- பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள்.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களால் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களின்போது, சொந்த ஊர்களுக்கு சென்று அவர்கள் விழாவை சிறப்பித்து வருவது வழக்கம். மக்களின் பயன்பாட்டுக்காக விழாக்காலங்களில் சிறப்பு பேருந்து- ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு சென்று கொண்டாட சென்னைவாசிகள் விரும்பி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகிறார்கள். இதனால் பேருந்து - ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் (10-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை) 21,904 பஸ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பொங்கல் சிறப்பு பஸ்களில் கடந்த 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துத்துறை தனது எக்ஸ் வலைதளத்தில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பஸ்களின் இயக்கம் நேற்று (12.01.2025) நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையான 2,092 பஸ்களில், 2,092 பஸ்களும், 1,858 சிறப்பு பஸ்களும் ஆக 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்தனர். கடந்த 10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளனர்" என்று அதில் பதிவிட்டுள்ளது.