search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் 7-ந்தேதி ரோடு-ஷோ: ரூ.9 ஆயிரம் கோடி பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்
    X

    நெல்லையில் 7-ந்தேதி 'ரோடு-ஷோ': ரூ.9 ஆயிரம் கோடி பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

    • மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • நெல்லையில் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப் பயணம்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லையில் நாளை முதல் 2 நாட்கள் அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக நாளை பிற்பகலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து நெல்லைக்கு காரில் புறப்படுகிறார்.

    அவருக்கு பாளை கே.டி.சி. நகரில் வைத்து நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து கங்கைகொண்டான் சிப்காட் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு டாடா பவர் சோலர் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைக்கிறார். விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகை வரும் முதலமைச்சர், மாலை 5 மணியளவில் புறப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பாளை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து அங்கு வைத்து காணொலி காட்சி வாயிலாக டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்கிறார். மேலும் நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளையும் காணொலி காட்சி வாயிலாகவே திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து பாளை நேருஜி கலையரங்கில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    அப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைகின்றனர். பின்னர் இரவில் அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி அளவில் சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாளை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

    பின்னர் காணொலி காட்சி வாயிலாக தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் உள்ளிட்ட முடிவுற்ற 24 திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    மேலும் நெல்லை நகருக்கான மேற்கு புறவழிச்சாலை பகுதி-1 திட்டப்பணி உள்ளிட்ட 20 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் 75 ஆயிரத்து 84 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    இந்த 2 நாட்கள் சுற்றுப்பயணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் ரூ.9 ஆயிரத்து 368 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக 7-ந்தேதி காலை முதலமைச்சர் மருத்துவ கல்லூரி மைதானத்திற்கு புறப்படும்போது வழிநெடுகிலும் நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    மேலும் வண்ணார்பேட்டையில் தொடங்கி விழா மேடை வரையிலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு- ஷோ' நிகழ்த்துகிறார். அப்போது பொதுமக்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்க ஏதுவாக இரும்பு தடுப்புகள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் செல்லும் வழியில் சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மேடைகளில் முதலமைச்சர் ஏறி பொதுமக்களிடையே கையசைக்க உள்ளார்.

    அவரது வருகையையொட்டி பிரமாண்ட வரவேற்பு பதாகைகள், வழிநெடுகிலும் கட்சி கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டு, முக்கிய மேம்பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது.

    பாளை மார்க்கெட்டை சுற்றிலும் தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. நேருஜி கலையரங்கம் அருகே சாலை விரிவுப்ப டுத்தப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்த சாலையோர தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×