என் மலர்
தமிழ்நாடு
பாஜக ஒரு தீய சக்தி.. அரசியலமைப்பு விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சு
- ஆர்.எஸ்.எஸ்.யை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் என்ன பங்கு வகித்தார்கள்?
- இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கொண்டது.
மக்களவையில் அரசியலமைப்பு குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் திமுக எம்.பி. ஆ. ராசா உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர்தார் வல்லபாய் படேல், நேரு, சரோஜினி நாயுடு உள்ளிட்ட பலர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
ஆனால், உங்களின் (பாஜக) முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இந்து மகா சபாவை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் என்ன பங்கு வகித்தார்கள்?
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் அரசியலமைப்பு சாசனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருக்கிறீர்கள் மதச்சார்பின்மை உட்பட..
ஆனால் அரசியல் சாசன பதவியின் 2-ம் இடத்தில் இருப்பவர் முன்பு ஒரு மாநாட்டில் அரசியலமைப்பு சாசனத்தின் அடித்தளத்தை மாற்ற விரும்புகிறோம் என்று கூறினார்.
உங்கள் கட்சியில் தலைவர் ஒருவர் மக்களவை தேர்தலுக்கு முன்பாக நாங்கள் 400 இடங்களை வென்றால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றுவோம் என்று தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்டம் தொடர்பான ஒரு வழக்கை 1973 ஆம் ஆண்டு 13 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. அதன் தீர்ப்பு 1500 பக்கங்களில் உள்ளது. அந்த தீர்ப்பை நான் பலமுறை சட்ட மாணவராக இருந்தபோது படித்திருக்கிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தில் நீங்கள் பல திருத்தங்கள் செய்யலாம். ஆனால் அதன் அடித்தளத்தை நீங்கள் மாற்றக்கூடாது. அந்த வழக்கின் சாராம்சத்தை நான் குறிப்பிடுகிறேன். அரசியலமைப்பில் 6 முக்கிய கூறுகள் உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். 1. ஜனநாயகம் 2. மதச்சார்பின்மை 3. நாட்டின் சட்டம் 4. சமத்துவம் 5. கூட்டாட்சி 6. பாரபட்சமில்லாத நீதித்துறை. இந்த 6 கூறுகளும் பாஜகவின் ஆட்சியில் ஆபத்தில் உள்ளது. அதற்கு எதிராகத்தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டது. அது தான் உங்களில் கைகளிலிருந்து இந்த நாட்டை காப்பாற்றி கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்து கொண்டது. இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடாக அறிவித்து கொண்டது. ஆனால் இப்போது இப்படிப்பட்ட தீய சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவார்கள் என்று அம்பேத்கர் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.
பாஜகவை தீய சக்தி என்று ஆ. ராசா குறிப்பிட்டதற்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து பாஜகவை தீயசக்தி என்று ஆ ராசா குறிப்பிட்ட வார்த்தை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுமென்று அவைத்தலைவர் தெரிவித்தார்.