என் மலர்
தமிழ்நாடு
பருவம் தவறி பெய்த கனமழை எதிரொலி- நெற்பயிர்களை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகிறது
- விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்கதியாக உள்ளனர்.
- நாளை தமிழகம் வந்து நெற்பயிர்களை ஆய்வு செய்வதுடன் நெல்கொள்முதல் நிலையங்களுக்கும் சென்று பார்வையிடுவார்கள் என தெரிகிறது.
சென்னை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தது.
குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இதனால் விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்கதியாக உள்ளனர்.
இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் 17 சதம் ஈரப்பதம் இருந்தால் எடுப்பது என்ற வழக்கத்தை மாற்றி 22 சதம் வரை உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் அரசை வலியுறுத்தி வந்தது.
இதுகுறித்து தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான உணவு பாதுகாப்பு துறையின் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் கோப்ராவை நேரில் பார்த்தும் இன்று வலியுறுத்தி பேசினார்.
இதை ஏற்று, இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் உணவுத்துறையின் கீழ் உள்ள சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த உதவி இயக்குனர்கள் நவீன், டி.எம்.பிரீத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
இந்த குழுவினர் நாளை தமிழகம் வந்து நெற்பயிர்களை ஆய்வு செய்வதுடன் நெல்கொள்முதல் நிலையங்களுக்கும் சென்று பார்வையிடுவார்கள் என தெரிகிறது.
அதன் பிறகு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசின் உணவு அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்த அறிக்கையின் அடிப்ப டையில் 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.