search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை வரும் தென்மாவட்ட ரெயில்கள் தாமதம்
    X

    சென்னை வரும் தென்மாவட்ட ரெயில்கள் தாமதம்

    • மழையில் சிக்னல் சரியாக செயல்படாததால் ஒரு சில இடங்களில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
    • புதுச்சேரி- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தாமதமாக வந்து சேர்ந்தது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமாகி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக ரெயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து செல்லும் தென் மாவட்ட ரெயில்களும், தென்மாவட்ட பகுதியில் இருந்து புறப்பட்டு வரும் ரெயில்களும் 30 நிமிடங்கள் தாமதமாக வந்தன.

    மழையில் சிக்னல் சரியாக செயல்படாததால் ஒரு சில இடங்களில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. சிக்னல் கிடைத்த பிறகும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக இரு மார்க்கத்திலும் ரெயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, அனந்தபுரி, பாண்டியன், பொதிகை உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் எழும்பூருக்கு தாமதமாக வந்து சேர்ந்தன.

    மேலும் விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரெயில்வே பாலத்திலும் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவதும் தாமதத்திற்கான முக்கிய காரணமாகும்.

    திருநெல்வேலியில் இருந்து எழும்பூருக்கு புறப்பட்ட சிறப்பு ரெயில் 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. புதுச்சேரி- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தாமதமாக வந்து சேர்ந்தது.


    எழும்பூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தாமதமாக புறப்பட்டு சென்றது. தென் மாவட்ட ரெயில்கள் விரைவாக வந்து சேர வேண்டும் என்ற நோக்கத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் தாமதமாக புறப்பட்டது.

    இதே போல் புறநகர் மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் ரெயல் பாதையில் தண்ணீர் தேங்கி நின்றதால் குறைவான வேகத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டன.

    திருவள்ளூர், ஆவடி, திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கி நின்றதால் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.

    அதிகாலையில் இருந்து மூர் மாக்கெட்-அரக்கோணம் இடையேயான புறநகர் மின்சார ரெயில்களை குறித்த நேரத்தில் இயக்கமுடியவில்லை. பயணிகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் தேங்கி நின்ற இடங்களில் மெதுவாக இயக்கப்பட்டன.

    Next Story
    ×