என் மலர்
தமிழ்நாடு
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு விருதுகள் வழங்கினார்
- விருதாளர்களுக்கு விருது தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
- 2024-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பி.க்கு முதலமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
சென்னை:
தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2025-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது செந்தமிழ்ச் செம்மல் பெரும் புலவர் படிக்கராமுவுக்கும், 2024-ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது எல். கணேசனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கே.வி. தங்கபாலுவுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும் மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன். செல்வ கணபதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்துக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வே.மு.பொதிய வெற்பனுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி, சிறப்பித்தார். இவ்விருதுகளைப் பெறும் விருதாளர்களுக்கு விருது தொகையாக தலா இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது விடுதலை ராஜேந்திரனுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024-ம் ஆண்டிற்கான அண்ணல் அம்பேத்கர் விருது ரவிக்குமார் எம்.பி.க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். இவ்விருதுடன் விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக தலா 5 லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்யப்பட்டது.
முத்து வாவாசிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருதுடன், விருதுத்தொகையாக பத்து லட்சம் ரூபாய், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கி, பொன்னாடை அணிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மெய்யநாதன், டாக்டர் மதிவேந்தன், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், உயர் அதிகாரிகள் விஜயராஜ்குமார், ராஜாராமன், வைத்திநாதன், அருள் கலந்து கொண்டனர்.