search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இருமொழிக் கொள்கை: அமைச்சர் பி.டி.ஆர். வீடியோவை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X

    இருமொழிக் கொள்கை: அமைச்சர் பி.டி.ஆர். வீடியோவை பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

    • எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது.
    • ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி என்று கூறி முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள்.

    மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ. 2400 கோடி நிதியை அளிக்கும் என்று மத்திய அமைச்சர் கூறியிருந்தார். இவரது கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பூதாகாரமாக வெடித்துள்ளது. மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    தமிழ்நாடு பா.ஜ.க. மட்டும் மும்மொழி கொள்கை இந்தி திணிப்பு இல்லை என்றும் மாணவர்கள் விரும்பிய மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என்றும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. மேலும், தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் இந்தி கற்பதை தி.மு.க. திட்டமிட்டு தடுப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில், மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக கரண் தப்பார் மேற்கொண்ட நேர்காணலில் பேசிய அமைச்சர் பி.டி.ஆர். அவரது கேள்விகளுக்கு அதிரடி பதில் அளித்ததோடு, பதில் கேள்விகளையும் அடுக்கினார்.

    நேர்காணலில் மும்மொழிக் கொள்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த பி.டி.ஆர். "மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் ரூ. 2400 கோடி நிதி வழங்க முடியும் என மத்திய அமைச்சர் கூறுவது லஞ்சம் கொடுத்தாதால் தான் தொழிலை நடத்த விடுவேன் என ரவுடி துப்பாக்கியை எடுத்து எனது நெற்றி பொட்டில் வைத்து மிரட்டி கேட்பது போல இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "எப்பொழுதும் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை குறிப்பாக இந்தியை எதிர்ப்பதாக பேசி வருகின்றீர்கள். கல்வி மிக நுட்பமானது என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தி குறிப்பாக எங்களுக்கு தேவையில்லை என்பதை நீதிக்கட்சி காலத்தில் இருந்தே நாங்கள் கூறி வருகிறோம். ஏற்கனவே இந்தியை திணிக்க நினைத்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாடறியும்."

    "எந்த காலத்திலும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது. ஏற்கனவே இந்தி தான் தேசிய மொழி என்று கூறி முப்பது மொழிகளை அழித்து விட்டார்கள். எங்கள் குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ அதனை கற்று கொள்ளட்டும். நாங்கள் தடுக்க மாட்டோம். இந்தி கற்றுத் தரும் பள்ளிகளை நாங்கள் அழிக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசு தமிழ் மொழியை தான் கற்றுக் கொடுக்கும். கூடுதலாக ஆங்கிலம் மட்டும் தான் கற்பிக்கப்படும்."

    "நான் ஒரு தொழிலை ஆரம்பிக்கிறேன். அந்த தொழிலுக்கு பாதுகாப்பு தர வேண்டிய நபர் ஒரு ரவுடி போல துப்பாக்கி எடுத்துக்கொண்டு எனது நெற்றியில் வைத்து மாமுல் தர வேண்டும். அப்போதுதான் தொழிலை நடத்த முடியும் என சட்ட விரோதமாக கேட்கிறார். அவர் மிரட்டுவதற்காக நான் மாமூல் தர வேண்டுமா? நியாயப்படி நீங்கள் துப்பாக்கி எடுத்து என் தலையில் வைத்து மிரட்டுபவரிடம் தான் பேச வேண்டும். என்னிடம் பேசக்கூடாது" என்றார்.

    இந்நிலையில், இந்த நேர்காணலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி தேசிய அளவில் பேசுபொருளானது. இந்நிலையில், அந்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

    அவரது பதிவில், "இருமொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெள்ளத் தெளிவாக விளக்கி உள்ளார். தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் நிலையில், ஏகாதிபத்திய மனோபாவம் கொண்ட சிலரது வசதிக்காக தமிழ்நாட்டின் மீது மொழிக் திணிப்பு ஏன்" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×