என் மலர்
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் பெயர் பலகை ஆங்கிலத்தில் இருப்பது ஏன்? விவசாயி கேள்விக்கு கலெக்டர் விளக்கம்

- ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது.
- தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மதுரை:
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்றனர். உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு அதற்கான உறுதிமொழியை ஏற்க வேண்டி உள்ளதால் கூட்டத்திலேயே ஏற்கலாம் என மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறினார்.
அதனை தொடர்ந்து அரசு அலுவலர்கள் வளாக கூட்ட அரங்கில் பங்கேற்றனர். தொடர்ந்து விவசாயிகளும், அரசு அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் உறுதி மொழியை வாசிக்க தொடர்ந்து பின் உறுதிமொழியை ஏற்றனர்.
அனைவரும் உறுதி மொழி ஏற்று அமர்ந்த பிறகு விவசாயி ஒருவர் எழுந்து "தமிழை வளர்க்க வேண்டும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. உறுதி மொழி ஏற்கிறோம், ஆனால் சென்னையில் தலைமை செயலகம் சென்றால் அங்கு உள்ள அமைச்சர்கள் பெயர் பலகை ஆங்கிலத்தில் உள்ளது என கூறினார்.
இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் சங்கீதா, தமிழ்நாட்டில் தமிழ் தான் தாய் மொழி, ஆங்கிலம் உலகப் பொதுமறையாக இருக்கிறது. அரசு அலுவலர்கள் அனைவரும் தமிழில் தான் கையொப்பம் இடுகிறோம். வெளி மாநிலத்திலிருந்து வந்தாலும் அவர்களும் தமிழில் தான் கையெழுத்து இடுவார்கள். தமிழை வளர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
அதனையும் விடாமல் விவசாயி ஆனால் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது என கூறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.