என் மலர்
தமிழ்நாடு
குன்னூரில் உள்ளூர் மக்களுடன் நடனமாடி பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
- லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
- தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.
குன்னூர்:
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக குன்னூர் டென்ட்ஹில் பகுதியில் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு புனித தீர்த்த குடங்களுடன் தாரை-தப்பட்டை முழங்க, ஆடல் பாடலுடன் ஊர்வலம் தொடங்கியது. பாலகிளாவா, நீதிமன்றம், லெவல் கிராஸ், மவுண்ட் ரோடு வழியாக அணிவகுத்த ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலில் முடிவடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் டென்ட்ஹில் பகுதியில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தந்தி மாரியம்மன் திருவீதி ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் வாண வேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.
முன்னதாக லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து லண்டனை சேர்ந்த சார்லஸ் கூறியதாவது:-
கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு தற்போது குன்னூர் வந்து உள்ளோம். இங்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை, ஊர்வலத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தோம்.
எங்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கவுரவித்தனர். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வியந்து போனோம். இந்த நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாதது. தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குன்னூர் நகரமன்ற தி.மு.க. உறுப்பினர் சையதுமன்சூர் மற்றும் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.