search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்: துப்புதுலக்க முடியாமல் தவிக்கும் சைபர் கிரைம் போலீசார்
    X

    நீலகிரிக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்: துப்புதுலக்க முடியாமல் தவிக்கும் சைபர் கிரைம் போலீசார்

    • வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை.
    • தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த கேத்தி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று பகல் 1 மணிஅளவில் அந்த பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், உங்களின் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. மாணவர்களை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் ஊட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை வகுப்பில் இருந்து வெளியேற்றினர்.

    தொடர்ந்து மோப்ப நாய்களுடன் வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் அந்த பள்ளியில் அனைத்து பகுதிகளிலும் அங்குலம்-அங்குலமாக சோதித்து பார்த்தனர்.

    ஆனால் வெடிகுண்டு இருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வருவது தொடர்கதையாக நீடித்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் ஊட்டி சர்வதேச பள்ளி, குன்னூர் பள்ளி மற்றும் 4 நட்சத்திர ஓட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்திருந்தது. இதனால் போலீசார் அந்த பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

    ஊட்டி அரசு மருத்துவ கல்லூரிக்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது. தொடர்ந்து போலீசார் மருத்துவ கல்லூரியில் சோதனை நடத்தினர். பின்னர் இ-மெயிலில் வந்தது பொய்த்தகவல் என்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் மீண்டும் கேத்தி பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை யார் செய்கிறார்கள் என்பது குறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் இ-மெயில்கள் வெளிநாடுகளில் இருந்து வருவதால், இதனை யார் அனுப்புகின்றனர், எங்கிருந்து வருகிறது என்பது குறித்த எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இதனால் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    இதற்கிடையே கேத்தி தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அங்கு படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×