search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உதயநிதி ஸ்டாலின் டி.சர்ட் விவகாரம்- எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? நீதிபதிகள் கேள்வி
    X

    உதயநிதி ஸ்டாலின் டி.சர்ட் விவகாரம்- எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? நீதிபதிகள் கேள்வி

    • அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் பாலுசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர்.
    • நீதிபதிகள், ஒரே விவகாரத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, தி.மு.க.வின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி.சர்ட் அணிந்து வருவதாகவும், இது தலைமைச் செயலக ஊழியர்கள் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு எதிராக உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், சத்தியகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதே விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பிரவீண் சமாதானம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த வக்கீல் பாலுசாமி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், ஒரே விவகாரத்தில் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயபிரகாஷ் நாராயணன், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கோரிக்கையும், இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள கோரிக்கையும் வெவ்வேறானது என்றார்.

    அதற்கு நீதிபதிகள், இந்த வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டு, டிவிசன் பெஞ்சில் நிலுவையில் உள்ள வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக சேர்ந்துக் கொள்ளலாமே? என்று கருத்து தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்டு வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்குகளை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    Next Story
    ×