என் மலர்
தமிழ்நாடு

தைப்பூசம் முடிந்த பின்னரும் பழனியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

- கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
- மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படைவீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பால், பன்னீர், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆட்டம், பாட்டத்துடன் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாளில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
இதில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 776 மற்றும் 587 கிராம் தங்கம், 21,235 கிராம் வெள்ளி, 1153 வெளிநாட்டு கரன்சி கிடைத்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.