என் மலர்
தமிழ்நாடு

மகா சிவராத்திரி விழா கோலாகலம்: விடிய விடிய கண் விழித்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

- நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- சாமி தரிசனம் செய்ய அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்தனர்.
சென்னை:
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகா சிவராத்திரியையொட்டி நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோவில்களில் (முதல் ஜாமம் பூஜை மாலை 6 மணி முதல் இரவு 9மணி வரை-இரண்டாம் ஜாமம் பூஜை இரவு 9 மணி முதல் 12 மணி வரை-மூன்றாம் ஜாமம் பூஜை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை-நான்காம் ஜாமம் பூஜை அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை) 4 கால பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் வாங்கிக் கொடுக்கும் அபிஷேக பொருட்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஜாமத்திலும் அபிஷேகங்கள் செய்யப்படும். விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தஞ்சை பெரிய கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவை பட்டீஸ்வர சாமி கோவில், நெல்லையப்பர் கோவில், ஸ்ரீரங்கம் ஜம்புகேஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில், சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

விடிய விடிய நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் அனைத்துக் கோவில்களிலும் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.