என் மலர்
தமிழ்நாடு
மணிப்பூர் பிரச்சனைக்கு ஏன் அமைதியாக இருந்தீர்கள்? அண்ணாமலையை வினவிய திவ்யா சத்யராஜ்
- அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
- கொரோனா பெருந்தொற்றில் அதிகமான இறப்புகள் பதிவானபோது பால்கனியில் நின்று விளக்குகளை ஏந்தும்படி எங்களிடம் கேட்கப்பட்டது ஏன்?
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்க்குள்ளாக்கியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைதான ஞானசேகரன் என்பவர், திமுகவை சார்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை திமுக மறுத்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (நேற்று) நடத்துவதாகக் கூறியிருந்தார்.
அதன்படி, கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் அண்ணாமலை ஈடுபட்டார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்ட அண்ணாமலைக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:-
மணிப்பூர் பிரச்சனைக்கு ஏன் அமைதியாக இருந்தீர்கள்? கொரோனா பெருந்தொற்றில் அதிகமான இறப்புகள் பதிவானபோது பால்கனியில் நின்று விளக்குகளை ஏந்தும்படி எங்களிடம் கேட்கப்பட்டது ஏன்? கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள நெரிசலான இடங்களிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டபோது, சில தலைவர்கள் ஏன் ரத யாத்திரையை ஏற்பாடு செய்ய முயற்சித்தார்கள்? தடுப்பூசி கொள்கை ஏன் பேரழிவை ஏற்படுத்தியது? என கேள்வி கேட்டுள்ளார்.