என் மலர்
தமிழ்நாடு
மாட்டுக்கறியை சாப்பிடுவீங்க... ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? - தமிழிசை
- கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என்று தமிழிசை கூறினார்
- ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்தார்.
மாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகும் என்று சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து கோமியம் விவகாரம் தொடர்பாக காமகோடி நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புகிறேன்" என்று தெரிவித்தார்.
காமகோடியின் இந்த கருத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் காமகோடியின் கருத்தை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கோமியம் குடித்தால் டாஸ்மாக் விற்பனை குறைந்து விடும் என நினைக்கிறார்கள். மாட்டுக்கறியை சாப்பிடுவர், மாட்டு சாணத்தை பயன்படுத்துவர். மாட்டின் கோமியம் மருந்து என்றால் எதிர்க்கிறார்கள். ஆயுர்வேதத்தில் மாட்டுக் கோமியம், 'அமிர்த நீர்' என சொல்லப்பட்டிருக்கிறது. விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ந்து ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் கோமியத்தை பயன்படுத்தக்கூடாது என பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து புத்தக விழாவில் பேசிய தமிழிசை, "மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க. ஆனால் கோமியத்தை குடிக்க மாட்டீங்களா? விஞ்ஞானப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்ட மருந்தாக மாட்டு சிறுநீரை குடிக்க வேண்டும் என்று கூறியவுடன் தமிழக அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிகிறார்கள். சங்க இலக்கியத்தில் கூட மாட்டுச்சாணம் பூசப்பட்ட முற்றங்களை நாம் பார்த்திருக்கிறோம். மார்கழி மாதத்தில் மாட்டுச்சாணியில் தான் பூசணிபூவை வைத்து அலங்கரிக்கிறோம்.
ஆக மாட்டுச்சாணத்தை நீங்கள் பூசும்போது.. மாட்டின் சிறுநீருக்கு அமிர்த நீர் என்று பெயர். அப்படி என்றால் உயிருக்கான நீர் என்று பொருள். நான் ஒரு அலோபதி டாக்டர். ஒரு அலோபதி டாக்டர் கோமியத்தை பற்றி பேசுகிறேன் என்றால்.. விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றால் நான் பேசியிருக்க மாட்டேன்.
வேங்கைவயலில் குடிநீரில் மலம் கலந்தால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. விஞ்ஞானபூர்வமாக மாட்டின் சிறுநீர், அமிர்தநீர் என்று ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது. இதை சொன்னால் குதி குதி எனக் குதிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.