என் மலர்
தமிழ்நாடு

4 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

- சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க. கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது.
- சென்னை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி கள ஆய்வு நடக்கிறது.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கட்சி வளர்ச்சி குறித்தும், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி வியூகம், அ.தி.மு.க. மேற்கொண்டு வரும் பணிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க. கள ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. சென்னை ஒருங்கிணைந்த மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி கள ஆய்வு நடக்கிறது. இது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், பா.வளர்மதி, மாதவரம் மூர்த்தி , ரமணா, அப்துல் ரஹீம், மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆதி ராஜாராம்,கே.பி. கந்தன்,பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, வி.என்.ரவி, சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன், தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அலெக்சாண்டர், அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ, அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.. வி.எஸ்.பாபு, மைத்ரேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க தலைமை கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். எடப்பாடியார் வாழ்க , வருங்கால முதல்வர் வாழ்க, என கோஷங்கள் எழுப்பினார்கள். கட்சி நிர்வாகிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.