search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் குவியும் தி.மு.க.வினர்
    X

    அமலாக்கத்துறை சோதனை எதிரொலி: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் குவியும் தி.மு.க.வினர்

    • சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
    • கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    வேலூர்:

    வேலூர் காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளது.

    மேலும் ஆந்திர எல்லையோரம் உள்ள கிறிஸ்டியான் பேட்டையில் கிங்ஸ்டன் என்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடு மற்றும் கல்லூரியில் சோதனையை தொடங்கினர்.

    அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன்.

    இவர் காட்பாடி அடுத்த பள்ளி குப்பத்தில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

    மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரியில் இருந்து சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார்.

    அப்போது காட்பாடி காந்திநகரில் உள்ள அவர்களின் வீடு. கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, பள்ளிக்குப்பத்தில் உள்ள அவரது சகோதரி விஜயா வீடு, சிமெண்ட் கிடங்கு, அதற்கு அடுத்த தெருவில் உள்ள தி.மு.க பிரமுகர் தாமோதரன் வீடு, வஞ்சூர், செங்குட்டை, கோட்டநத்தம் ஆகிய இடங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் குடோனில் இருந்து சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகள், துணிப்பைகளில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அவை அனைத்தும் 200 ரூபாய் கட்டுகளாக இருந்தது. ஒவ்வொரு கட்டிலும் ஊரின் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டி ருந்ததால் இந்தப் பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும், வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை வரவழைத்து எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.11.51 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.


    கடந்த 2019-ம் ஆண்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட துரைமுருகன் வீடு, கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் குடோன் ஆகிய இடங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனையை நடத்தினர்.

    தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

    காட்பாடியில் இன்று காலை 4 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டு முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.

    அதேபோன்று அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×