search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் நாளை ஆலோசனை
    X

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் நாளை ஆலோசனை

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்த போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனான இவர் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற முடிந்தது.

    கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமகன் ஈவேரா திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க. கூட்டணி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.

    அவர் 66 ஆயிரத்து 233 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த மாதம் 14-ந்தேதி அவர் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காலியானது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் (10-ந்தேதி) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் 17-ந்தேதி ஆகும்.

    என்றாலும் பொங்கல் விடுமுறை வருவதால் 10, 13, 17 ஆகிய 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. சார்பில் இந்த தொகுதியில் களம் இறங்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் விரும்பினார்கள். இதற்காக இந்த தொகுதியில் கள ஆய்வு பணியினை மேற்கொண்டனர். ஆனால் அது காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் தாங்கள் களம் இறங்க விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தார்.

    மேலும் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்றார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையும், காங்கிரஸ் நிர்வாகிகளும் சந்தித்து பேச உள்ளனர்.

    அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் தேர்வாகும் வேட்பாளர் பற்றி காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவிக்கப்பட்ட பிறகு வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர்கள் விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் முதல்கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்காளர் பட்டியலை வைத்து ஆய்வு செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் கடந்த முறை வாக்காளிக்காதவர்களை குறி வைத்து தி.மு.க.வினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் சந்திர குமார் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ்தான் போட்டியிடும் என்று தெரியவந்து இருப்பதால் அங்கு களம் இறங்கப்போகும் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மூத்த மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடுவார் என்று தெரிகிறது. ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியினர் அவரது பெயரை வேட்பாளராக பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றி காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இளங்கோவனின் மகன் சஞ்சய்சம்பத்தை வேட்பாளராக நிறுத்தும் பட்சத்தில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கருதுகிறார்கள். தி.மு.க. கூட்டணியில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் ஆதரிக்க தயார் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    அதுபோல தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவது தொடர்பாக மூத்த தலைவர்களிடம் மாறுபட்ட கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒருசாரார் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    சிலர் மட்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறி வருகிறார்கள். வருகிற 11-ந்தேதி இதில் எடப்பாடி பழனிசாமி இறுதி முடிவு எடுத்து அறிவிக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா கட்சி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்துகிறது. தோழமை கட்சிகளுடன் பேசிய பிறகு இறுதி முடிவு எட்டப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×