என் மலர்
தமிழ்நாடு
வி.சி.க.-வை ஆதவ் அர்ஜூனா இரண்டாக உடைத்துவிடுவாரோ என தோன்றுகிறது- ஈஸ்வரன்
- வீடியோ மீண்டும் பகிரப்பட்டதால் விசிக, திமுக கூட்டணிக்குள் நெருக்கடி ஏற்பட்டது.
- ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த கருத்து என்று வி.சி.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எக்ஸ் தளத்தில், ஆட்சியில் அதிகாரம் வேண்டும் எனும் அவரின் பழைய வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விவாதம் எழ, அந்த வீடியோவை தான் பதிவு செய்யவில்லை என்றும் அட்மின் பதிவு செய்தார் என்றும் சொல்லி அந்த வீடியோ நீக்கப்பட்டது.
பிறகு அதே வீடியோ மீண்டும் பகிரப்பட்டதால் விசிக, திமுக கூட்டணிக்குள் நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் விசிக உள்ளதை உறுதிப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி இல்லாமல் வடமாவட்டங்களில் தி.மு.க. வெல்ல முடியாது. 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் ஏன் துணை முதலமைச்சர் ஆகக்கூடாது? ஆட்சி, அதிகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு என மீண்டும் கொளுத்தி போட்டார்.
ஆதவ் அர்ஜூனாவின் இந்த கருத்து கூட்டணி கட்சிகளுக்கிடையே பெரும் விவாதமாக எழுந்தது. தி.மு.க. - வி.சி.க. இடையே கூட்டணி முறிவு ஏற்படும் என்று பேசப்பட்டது.
இதனையடுத்து, ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது ஆதவ் அர்ஜூனாவின் சொந்த கருத்து என்று வி.சி.க. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
ஆதவ் அர்ஜூனா தனித்தன்மை வாய்ந்தவர். திறமையானவர். அதில் மாற்றுக்கருத்து கிடையாது. எல்லா வசதிகளும் படைத்தவர்.
அவர் இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியிலே ஊடுருவிக்கொண்டிருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை அவர் இரண்டாக உடைத்து விடுவாரோ என்று கூட எனக்கு சந்தேகம் இருக்கிறது.
ஆக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.